அலைஞனின் அலைகள்: கருப்பணி
Friday, August 26, 2005
 
மதத்தில் மற/றைந்தது மாமதயானை
மதத்தில் மற/றைந்தது மாமதயானை

நாகூர் (உ)ரூமி சல்மாவின் "இரண்டாம் ஜாமங்களின் கதை" ஐ ("சாமியேறி உறுமிச் சாட்டையாற் சாத்தி வேப்பிலையால் உருவி எடுத்திருக்கிறார்" என்று எழுதினால், மதநம்பிக்கைக்குப் பங்கமெனக் கோவித்துக்கொல்வாரோ என்று எண்ணுவதால்,) விமர்சித்திருக்கிறார் (=விமர்சையாய்த் திருகியிருக்கிறார்). (இங்கே, 'மைலாஞ்சி'க்கு அவரிடமிருந்து வந்த விமர்சனமெனக் கேள்விப்பட்டதையிட்டு "மீண்டுமொரு முறை" என்று சொல்வதா அல்லது அவரின் பதிவுகளை இட்டு "வழக்கம்போல" என்று சொல்வதா என்று எனக்குள்ளே குழப்பமேற்பட்டது; அதனாலே, அப்படியான இடைச்செருகற்கூற்றுகளை மேற்படி வசனத்திலே நான் நுழைக்கவிரும்பவில்லை)

தட்டச்சுச்செருமலான ஆரம்பப்பந்திக்கு அடுத்த வரிகளாக இங்கே சொல்லிக்கொள்ளவேண்டியவை இரண்டு:
1. 'இரண்டு ஜாமங்களின் கதை' இனை நான் இன்னும் வாசிக்கவில்லை; அதனாலே, நூல் குறித்து வாசகனாகச் சொந்தக்கருத்துச் சொல்ல எனக்கு இக்கணத்திலே ஏதுமில்லை. சொல்வதெல்லாம், ரூமியின் புத்தகப்பார்வை குறித்த என் கோணற்/ப்பார்வைவழிப்பட்டதே.
2. இவரின் இஜாக விமர்சனத்தினை வாசிக்கமுன்னாலேயே, சல்மா குறித்தும் ரூமி குறித்தும் எனக்கு இன்னார் இப்படித்தான் எழுதுவார், எதிர்வினைப்பாரென்று அழுத்தி குத்திக் கொங்கிறீட் போட்டமாதிரியான நிலைப்படு பிம்பமுண்டு.

ரூமியின் விமர்சனம் பார்த்த பின்னால், சல்மா பற்றிய பிம்பம் சற்று ஆடி நடுங்கித் தளும்பிப் போயிருக்கின்றது; ரூமியின் பிம்பம், இன்னும் உறுதியாய் உருக்காகியிருக்கிறது.


பொதுவிலே, முஸ்லீம் பெண்கள் எதைக் குறித்து (குறிப்பாக, இஸ்லாம் & முஸ்லீங்கள் சம்பந்தப்பட்டு) எப்படி எழுதவேண்டுமென்று தன் நம்பிக்கைகளை நியாயப்படுத்துவதாகவே (அல்லது நிர்ப்பந்தப்படுத்துவதாகவெனச் சொல்வோமா?) ரூமியின் சொற்கள் அறுத்துத் தெறித்து விழுந்திருக்கின்றன; ஆங்கிலப்பேராசிரியரான ரூமி, பிறப்பாலேயோ வளர்ப்பாலேயோ முஸ்லீங்கள் அல்லாத காமம் குறித்துப் பதிந்த கமலா மார்க்கண்டேயா தொட்டு அண்மைய ஆன் மோஹன்ராஜ் வரையான பெண்பதிவுகள் குறித்து என்ன கருத்தினைக் கொண்டிருக்கின்றார் என்பதை அறிந்தால், சல்மாவின் படைப்புக் குறித்து இவருடைய பார்வை இன்னும் எமக்குத் தெளிவாகலாமெனத் தோன்றுகிறது.


இடையிலே ரூமி தன் விமர்சனத்திலே தனக்கு வரக்கூடிய எதிர்ப்புகளை எண்ணி எச்சரிக்கையாக ஒரு குண்டு துளைக்காக்கவசத்தினை மாட்டிக்கொள்கிறார்:

இத்தகையை கேள்விகளும் இதற்கான பதில்களும் பல முறை கேட்கப்பட்டு பதில்களும் சொல்லப்பட்டு நீர்த்துப் போயாச்சு. ஒரு மதத்தைப் பின்பற்றும் ஒருவர் அதன் சட்டதிட்டங்கள் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்துகொள்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அப்படிக் கேள்வி கேட்பதே முற்போக்கு என்றும் ஆதிக்கத்துக்கு எதிரான நியாயமான குரலென்றும் எழுத்தில் பதிவு செய்வது, அதுவும் சீரியஸாக அல்ல, ஒரு ஓரமாக, எந்த வகையில் சரி என்று எனக்கு விளங்கவில்லை. திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லி ஈரான் போன்ற நாடுகளில் விபச்சாரம் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி ஏழைப் பெண்களை பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்துக் கொலை
செய்கிறார்கள். இதை எதிர்த்து என்றைக்காவது சல்மா போன்றவர்கள் குரல்
கொடுத்துள்ளார்களா? (பார்க்க எனது கட்டுரை கற்காலம்).

கேள்விகளை எழுப்புதலுக்குப் பதில்கள் சொல்லப்பட்டு நீர்த்துப்போய்விட்டதென்கிறார்; (கேள்வி நீர்த்ததா, அல்லது, பதில் நீர்த்ததா என்பது இவரது வசனத்திலிருந்து தெளிவாகவில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும்) ஆனால், கேள்விகள் ஏன் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லையா? பதில்கள் மட்டுமே நடைமுறையிலே தீர்வாகாது; நாளாந்த வாழ்க்கையிலே தீர்வு ஏற்படும்வரை கேள்விகள் ஒரேதன்மையானவை என்றாலுங்கூட எழுப்பப்பட்டுக்கொண்டேயிருக்கும். இதேபோல படைப்புகளிலே கேள்விகளெழுப்புவதை "முற்போக்கென்றோ ஆதிக்கத்துக்கு எதிரான குரலென்றோ எழுத்திலே பதிவு செய்வதைச் சிலாகிப்பது" ஓர் ஆர்ப்பாட்டமும் அதீத வேஷமும் கொண்ட ஆடம்பர அவலமாகத் தமிழ்ப்படைப்புலகிலே காணக்கூடியதாகவிருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ளலாம் (புத்தகவெளியீட்டுவிழாக்களிலே, படைப்புலகிலே எழுத்தாளர்களைப் பாராட்டி அமெரிக்காவிலே, "Great" என்று பயன்படுத்துவதற்கீடான சொற்களை ரூமி அள்ளி வழங்குகின்ற பொய்மை கொண்டவரில்லை என்றே நம்புவோம்). தனிப்பட சல்மா குறித்தும் அப்படியாகவே ரவிக்குமார் சொல்லியிருப்பதாகவும் வைத்துக்கொள்வோம்; ஆனால், அதற்கு ரூமி, "அதெல்லாம் இவர்களுக்கு முக்கியம் அல்ல. பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும். மிக அவசியமான தேவை அதுதான். அதற்காக ஒரு நாவல் எழுதவும் அவர்கள் தயார்" என்றெழுதுவது இவரின் கற்பனை வளர்ச்சியையோ வரட்சியையோ காட்டுவதாக மட்டுமல்ல, அவர் சுட்ட விழைவதுபோல, பெண்களை மதிக்கின்ற மாதிரியாகவும் ("மோகமுள்" அதைச் செய்ததா என்பதை அம்பை, கோ. ராஜாராம், வாசித்தவர்கள் கருத்துக்கு விட்டுவிடுவோம்) தெரியவில்லை. அப்பாவி ஏழைப்பெண்ணைக் கல்லாலடிப்பதற்கும் "பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும். மிக அவசியமான தேவை அதுதான்" என்றெழுதுகிற பெண்ணெழுத்தாளரைச் சொல்லாலடிப்பதற்கும் பெரிய வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை.

சல்மா வேண்டுமென்றே எழுதியிருக்கின்றாரா என்று விமர்சனத்தினை மட்டும் வைத்துக்கொண்டு எனக்கேதும் சொல்லமுடியாது; சல்மா குறித்து மட்டுமல்ல, பெரும்பாலான பெண் கவிஞர்கள் குறித்து எனக்கும் ஓர் ஆதங்கம் ஓரமாகவிருந்தது (சிலர் குறித்து இன்னமுமிருக்கின்றது); பெண்களின் துயரங்களைக் குறித்து - குறிப்பாக ஆண்களைச் சாடி- எழுதுகிற இவர்களிலே எத்தனை பேர் மெய்யாகவே வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டோ தமக்கு வாய்ப்பிருக்கும் சந்தர்ப்பங்களிலோ அத்துயரங்கள் குறித்து எதிர்நடவடிக்கைகளாக ஏதும் நடைமுறையிலே செயற்படுத்தியிருக்கின்றார்கள் என்பதே அதுவாகும். வெறும் கவிதையும் கதையும் கட்டுரையும் மட்டுமே எதையும் சாதித்துவிடமுடியுமென நான் நம்பவில்லை. ஆனால், ஒரு படைப்பினை விமர்சிக்கும்போது, இரண்டு வழிமுறைகளிலே விமர்சிக்க வாய்ப்புண்டு; ஒன்று, எழுத்தாளரினையும் படைப்புச்சம்பந்தமான எழுதப்பட்ட காலம், சூழல் போன்ற புறச்சூழல்களை முழுக்க எண்ணத்திலிருந்து உரித்து ஒதுக்கிவைத்து, படைப்பினை மட்டுமே முன்னெடுத்துக்கொண்டு, அதன் ஆழம் அகலத்தினை வெளிப்படையான கருத்து, சூட்சுமசொற்பயன்பாடுகளினை வைத்துப் பார்ப்பது; மற்றது, படைப்பாளியின் எழுதியவரையும் படைப்பின் புறச்சூழல்களையும் உள்வாங்கிப் படைப்பினை வாசித்தல். இரண்டு நிலைகளிலுமே வாசகர் தன் நிறுவப்பட்ட நம்பிக்கைக்கோவையை விலத்தி வைத்துவிட்டு வாசிக்கமுடியாதுபோனாலுங்கூட, நிச்சயமாக, ஒரு படைப்புக்கு இந்த இரு விதமான விமர்சகர்களும் (அதாவது வாசகர்களும்) இருக்கவே செய்வார்கள். இந்த இரண்டு பார்வைகளூடாகவும் காணப்படுகின்றவை ஒத்திருக்க வாய்ப்பிருக்காது; ஒன்றுக்கொன்று முரணான முடிவுகளுக்கும் படைப்பாளி குறித்து மாறுபட்ட கருத்துக்கும் வர வாய்ப்பிருக்கின்றது.

அந்த வகையிலே, சல்மா குறித்தும் அவரது சகோதரர் மனுஷ்யபுத்திரன் குறித்தும் அறிந்திருக்கும் ரூமிக்கு சல்மா குறித்து அவருடைய சொந்தவாழ்க்கை குறித்தும் சொல்லக் எதிர்மறையான கருத்திருக்கலாம்; (சல்மா மனுஷ்யபுத்திரன் சகோதரி என்பது காரணமாகவும் கனிமொழி கருணாநிதி புதல்வி என்பது காரணமாகவுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றார்களென்ற கருத்து என்னிடமும் இருந்ததென்பதை இங்கே சுட்டிவிடுகிறேன்; சல்மா சில ஆண்டுகளுக்கு முன்னால், இலங்கைக்கு முஸ்லீம் பெண்கள் மகாநாடு ஒன்றுக்குப் போனபோது சேரன் தனக்குச் சொன்னதை வைத்தே இலங்கைநிலை குறித்துப் பார்த்தவிதத்திலும் எனக்கு முரணுண்டு; ஆனால், அவை படைப்புக்கு அப்பாற்பட்ட புறக்காரணிகள்; அதனால், இலங்கை குறித்துக் கவிதையோ கதையோ எழுதாதவரை அவருடைய படைப்பினைக் குறித்து என் பார்வை இப்புறக்காரணிகளை உள்வாங்கி இருக்க வாய்ப்பில்லை.) அதை நியாயமென்றே கொள்ளலாம். ஆனால், சல்மாவின் படைப்பினை அத்தியாவசியமற்ற தோல்வியான அழுகிய முட்டை என்று சொல்லுமளவுக்கு இப்புறக்காரணி மட்டும் போதாது; அதைத் தீர்மானிப்பவை இரண்டு: ஒன்று, நடைமுறையிலே, சல்மா சொன்ன பிரச்சனைகள் (கேள்விகள்) இன்னும் எதிர்நோக்கப்படுகின்றதா என்பதும் அவற்றுக்கான தீர்வுகள் (நடைமுறைப்படுத்தப்படும் பதில்கள்) எந்நிலையிலே சாத்தியப்பட்டிருக்கின்றன என்பது; இரண்டாவது, இந்தப்பிரச்சனைகள், பின்புலத்திலே எழுதப்பட்ட முன்னைய படைப்புகளிலும்விட, சல்மா எந்தவளவுக்கு தன்னைத் தனித்துக்காட்டும்விதமாகப் படைப்பினைத் தந்திருக்கின்றாரென்பதுமே.

உயிர்களின் தோற்றம் குறித்து, அறிவியலாளர் "குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன்" என அணுகும் விதத்துக்கும் சமயவாதி "ஆண்டவன் படைத்தான் எங்கிட்டே கொடுத்தான்" என்று அணுகும் விதத்துக்கும் வித்தியாசமுண்டு. எது சரி பிழையென்பது இருக்கட்டும்; ஆனால், அவை குறித்து புதிய சிந்தனைகளும் கருத்துவிரிவாக்கத்துடனும் விவாதிக்கப்படக்கூடாதெனச் சொல்லமுடியுமா? அப்படியாகவிருந்திருந்தால், இன்றைக்குச் சமயவாதிகள் இன்னொரு புதுக்கருத்தோடு வந்திருக்கமுடியாது. இது போலத்தான் ரூமி கேட்கப்பட்ட கேள்விகள்- சொல்லப்பட்ட தீர்வுகள் பற்றிச் சொல்வதற்கும் பதில் சொல்ல முடியும். சரி, ரூமி சுட்டிச்சொல்லும் கேள்விகள் தீர்வுகள் சொல்லப்பட்டவைதானென்றே வைத்துக்கொள்ளலாம்; ஆனால், தீர்வினை யாரோ எந்த மதநூலிலேயோ கட்டுரையிலேயோ சொல்லியிருக்கின்றாரென்பதற்காக மட்டும், ஒரு கதையின் பாத்திரங்கள் இயல்பாகப் பேசாமல், வெட்டிவைத்துவிட்டுப் பேசாமற் போக எல்லா நிலைகளிலும் முடியுமா? வேண்டுமானால், அதைத் தவிர்க்கும் விதத்திலும் சொல்லும் உத்தியிலும் படைப்பாளி தோற்றிருக்கின்றார் வென்றிருக்கின்றாரென்று நாம் பேசலாம்; அதை விட்டுவிட்டு, இந்தக்கேள்விகளுக்குப் பதில் ஏற்கனவேயுண்டு என்ற விதத்திலே, ஒரு மார்க்க அறிஞர் பேசலாம், ஆனால், ஓர் இலக்கியத்திறனாய்வாளர் பேசலாமா? அப்படியாக பதில் சொல்லப்பட்டது குறித்துப் பேசக்கூடாதென்றால், இத்தனை மதங்கள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை; செமித்தியமதம் ஒன்றேயொன்றாகவே ஒன்றாகவேவிருந்திருக்கும்; ஆலம் ஆராவின் பிறகு காதல் குறித்து ஓர் இந்தியப்படமுமே வந்திருக்கவாய்ப்பில்லை. இலக்கியத்திறனாய்வாளர் இந்த வகையிலே அணுகுதல் எவ்விதத்திலும் நேர்மையாகத் தோன்றவில்லை.


பின்-நவீனத்துவம் என்பதை இப்போது வரையரை செய்வது, இப்போதெல்லாம் தொடரங்காடியிலே தள்ளுவண்டியிலே அள்ளிப்போடும் அனைத்துப் பண்டங்களினதும் தொகுப்பாகிவிட்டது; அவரவர் வண்டிக்கு அவரவர் பட்டியலும் பண்டங்களும். ஆனால், "இதுதாண்டா பின் - நவீனத்துவம்" என்று தன் இரவுக்கனாப்பட்டியலை மட்டும் அச்சடித்துக் கடைவாசலிலே உள்ளே போகும் அத்தனை பேரிடமும் கொடுப்பது, தமிழிலக்கிய உலகத்திலே கொஞ்சக்காலமாக தொண்ணூறுகளின் பின்னரையிலே நடந்த விடயம் (காண்க: நடந்த விடயமென்றுதான் நினைத்திருந்தேன்; இப்போதும் நடக்கின்றதென்பதை, ரூமி ரவிக்குமார் சொல்வதாகக் குறித்திருப்பதிலிருந்து அறிந்து கொண்டேன்). வெறும் சொற்களை வைத்துக்கொண்டு வெருட்டுவதெல்லாம் ஆயதமிழ்க்கலைகளிலே அறுபத்தைந்தாவது சமகாலப்படைப்பிலக்கியக்கலையின் இலையிலே அடக்கம். ஒளித்து மறைத்து வாசிக்காத சஞ்சிகை, பத்திரிகைகளிலே, படங்களிலே கழிவுறுப்புகளையும், பாலுறுப்புகளையும் அதுசார் உணர்வுகளையும் வெளிப்பாடுகளையும் சொட்டிவிட்டால், இடக்கரடக்கல் இல்லாத எதையுமே பின் - நவீனத்துவம் என்று வகைப்படுத்துதலும் அதை படைப்புத்துறைமுன்னெடுப்பென்றும் இலக்கியக்கெடுதலென்றும் ஆளாளின் விருப்புவெறுப்புக்கேற்ப தூக்கியும் தாழ்த்தியும் பிடித்துக்கொள்வது அநியாயம்; சங்க இலக்கியங்களிலே அல்குல், கொங்கை என்று சொல்லப்படுவது அக்காலத்திலே வெட்கக்கேடாக இருந்திருக்குமா? (நான் வாசித்த அளவிலே ஆணுறுப்பினைப் பற்றி எங்கும் பேசப்பட்டதாது பண்டைத்தமிழ்க்குமுகம் ஆணாதிக்கம் மிக்கதாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதாக் உறுத்தவே செய்கிறது) பின்-நவீனத்துவம் தமிழிலே விரியப் பேசப்படாத காலத்துக்கு முன்னரே, 'குருதிமலை' புதினத்திலே வேலைசெய்யாப்போராட்டம் நடத்துவதை எதிர்க்கும் ஒரு பாத்திரம் பேசும், "(தேயிலை கிள்ளும்) தொழிலுக்குப் போகாமலிருந்தால், நாளைக்கு யாருக்குக் குண்டி காயும்?" கோமல் சுவாமிநாதனின் (பாலசந்தர் திரைப்படமாக இயக்கிய) "தண்ணீர் தண்ணீர் தண்ணீர்" இலே ஒரு பாத்திரம் கேட்கும், "குண்டி கழுவவே தண்ணீரில்லை." பாலுமகேந்திராவின் வீடு படத்திலே அர்ச்சனாவிடம் ஏமாற்றிய கட்டிடக்காரர் குறித்து ஒரு பாத்திரம் ஆத்திரத்தோடு பேசும், "விட்டுத்தள்ளும்மா; அவன் உன்னோட ஒரு பீக்கட்டிக்குச் சமனாவானா?" அல்லது, ஆதவனின் காகிதமலர்கள் தொட்டிருக்கும் சில பிரச்சனைகளின் (தாய்-மகன் இடையான உணர்வு) தன்மை; இந்தப்படைப்புகளிலே வாசகர், பார்வையாளர் எவருமே இது குறித்து முறையிட்டுக்கொண்டிருக்கவில்லை; சொல்லப்போனால், இந்தப்பதங்களில்லாவிட்டிருந்தால், அந்தப்படைப்புகளின் வீரியம் வெளிப்படாமல் ஸ்கலிதமாகியிருக்கும் ;-) மிகவும் சிறப்பாக, இப்படியான சொற்களைப் பயன்படுத்திய படைப்பு, ஷோபா சக்தியின் "கொரில்லா." அவர் "தூசணங்களை"ப் பயன்படுத்திய விதமும் சந்தர்ப்பங்களும் மிகவும் கச்சிதமாகவுமிருந்தன; அங்கே ஆபாசம் தோன்றவில்லை. அமெரிக்காவிலும் இதே நிலைதான் இருந்திருக்கின்றது. "All in the Family" வரும் காலம் வரைக்கும் தொலைக்காட்சியிலே கழிப்பறை என்பது குறித்துப் பேசுவதென்பதே நினைத்துப் பார்க்கமுடியாததாம்; ஆனால், இந்தத்தொலைக்காட்சித்தொடரிலே கழிப்பறையிலே ஆணும் பெண்ணும் நடந்து கொள்ளும் விதத்தினைச் சுட்டிப் பேசுவதினை வைத்தே சில பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். "அந்நேரத்திலே பார்வையாளர்களும் அதனைப் பெரிது படுத்திச் சுட்டவில்லை; இயல்பான பிரச்சனையின் விவாதமென்றே கொண்டு போனார்கள்" என்று தயாரிப்பாளர் ஒரு நிகழ்ச்சியிலே சொன்னார். நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தவென்றே வரும் படைப்புகள் இருக்கத்தான் செய்கின்றன; சில சாருநிவேதிதாவின் படைப்புகள், ஷோபா சக்தியின் 'ம்', இருள்வெளியிலே வந்த ஐந்துபேர் கூட்டுப்புணர்தல் பற்றிய கதை (மகாபாரதக்கதை அல்ல) போன்றவற்றினை அவற்றுக்குள்ளே அடக்குவேன். சல்மாவின் கதையிலும் பேசப்படவேண்டிய பிரச்சனைகளை, அதற்குரிய தொனியிலே பேசியிருக்கவில்லையென நினைக்கின்றீர்களா? ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரமோ, பாமாவின் 'சங்கதி', 'கருக்கு' ஆகியன பயன்படுத்தாத விதத்திலே சல்மா பயன்படுத்தியிருக்கின்றாரா? (சரி, இரா. முருகனின் அரசூர் வம்சம் குறித்துச் சிலாகித்து எழுதியிருக்கின்றீர்கள்; பின் - நவீனத்துவத்தின் ஒரு இலக்கிய உத்தி விழுதாக, மாந்திரீக யதார்த்தத்தையும் கொள்வோம். அதிலே இராமு பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் / செயற்பாடுகள் குறித்துச் சமாதானம் கொள்கிறீர்கள்/ சொல்கிறீர்கள்) அதேபோலத்தான் அவர் பயன்படுத்தியிருக்கின்றாரென்றால், ராஜ்கௌதமன், பாமாவுக்குமெதிராக, அதே விமர்சனத்தினை முன்வைப்பீர்களா? (ரவிக்குமாரும் ராஜ்கௌதமனும் ஒரேமடத்திலேதான் வாயிற்காப்போராக இருக்கின்றார்களென்ற அபூர்வமான காரணமேதுமில்லாவிட்டால்). சல்மாவின் தொனி கதைக்கு ஆகாததெனில், அதைச் சுட்டும் விதம் வேறு; சாருநிவேதிதா குறித்த உங்கள் ஆதங்கத்தோடு, "ஆனால் பைத்தியக்காரன் வழித்துக் காட்டுகிறான் என்றால் அதே போல செய்துகாட்டித்தான் அடுத்தவருக்குப் புரியவைக்க வேண்டும் என்ற நினைப்பை என்னவென்று சொல்வது? இதுதான் பின் நவீனத்துவமோ!" என்பது வேறு.

ரவிக்குமார் குறித்த என்னிடமிருந்த பிம்பம் (சில நண்பர்களினது கருத்துகளுங்கூட) கலங்கிப்போய்விட்டது; நாற்சார்மடத்திலே சில சீடர்கள் அகல புதுச்சீடர்கள் சேர்ந்திருக்கின்றார்கள்; பீடத்துக்கு அருகாமையிலும் சேய்மையும் வந்தும் போய்க்கொண்டிருமிருக்கின்றார்கள்; ரவிக்குமார் சிறந்த துவாரபாலகராயிருக்கின்றதாகவே தோன்றுகின்றது; ("பிள்ளைகெடுத்தான் விளை" குற்றக்குறளிகள் நுழையாமற் காத்ததினைப் பார்க்கவேண்டுமே). ஆனால், சல்மாவின் விமர்சனத்துக்கு "நல்லது. எனது நோக்கம் இலக்கியம் மட்டுமே. இப்படி இமயமலையில் உச்சியின் சல்மாவை வைப்பதற்கு ரவிக்குமாரின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை" என்று ரூமி எழுதுவாரென்றால், இதேபோல, மனுஷ்யபுத்திரனுக்காக இத்துணை ரூமி கவலைப்படக்காரணமென்னவென இன்னொரு விதண்டாவாத ஆராய்ச்சியின் முடிவு, "நல்லது. எனது நோக்கம் இலக்கியம் மட்டுமே. இப்படி மரியானா அகழியின் ஆழத்தில் சல்மாவை வைப்பதற்கு ரூமியின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை" என ஏற்படும். ஆனால், இவையெல்லாம் தேவையில்லாத கேள்விகளெனத் தோன்றுகின்றன; தமிழ்ப்படைப்புலக விமர்சனங்களிலே, வெளியீட்டுவிழாக்களிலே, அணிந்துரை, முகவுரை ஆகியவற்றிலே இருக்கும் கோளாறெல்லாம், படைப்பை விட்டுவிட்டு, படைத்தவனையும் படைப்புக்குப் பங்களித்தாரையும் அதீதமாகத் தூக்கிப்பிடித்துக்கொள்ளுதலேயெனத் தோன்றுகின்றது.

"Facts are stubborn things, and whatever may be our wishes, our inclinations, or the dictates of our passions, they cannot alter the state of facts and evidences." - John Adams

Comments: Post a Comment

<< முகப்பு

Powered by Blogger